30 வருட வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளது; சாந்தனின் தாயார் உருக்கம்

Admin
Nov 11,2022

30 வருடங்கள் கோவில் குளம் என திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்றும் தனது மகன் விடுதலையாவதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி என்றும் சாந்தனின் தாயார் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக 30 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த சாந்தனின் விடுதலை தொடர்பில் அவரது தாயார் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலை தொடர்பில் யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி இலக்கணாவத்தையை சேர்ந்த சாந்தனின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரிசின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயனபடுத்தி நளினி உள்ளிட்ட அறுவரை இன்று விடுதலை செய்தது.

உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மேலும் தெரிவிக்கையில்,“பேரறிவாளனை விடுதலை செய்ததில் இருந்து எனக்கு பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று ஏக்கமாக இருந்தது. அது இப்போது தான் நிறைவேறியது.

எனது உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேர வேண்டும். அவருடன் நான் சிறிது காலம் வாழ வேண்டும். அதற்காக தான் நான் உயிருடன் இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.