இலங்கைக்கு வர யோசிக்கும் ஐரோப்பிய மக்கள்

Admin
Aug 08,2022

ஐரோப்பிய நாடுகளிலிருந்து விடுமுறைக்காக இலங்கை செல்ல பெருமளவானோர் திட்டமிட்டுள்ளனர். எனினும் அங்கு நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு எரிபொருள் நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய நடைமுறை அரசாங்கம் அமுல் செய்துள்ளது.

இலங்கை செல்வோர் விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கு கிவ்.ஆர் குறியீடுகளை வழங்குவதற்கான பதிவுக்கான வசதிகளை வழங்குதல், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து வணிக பதிவு எண் மூலம் பல வாகனங்கள் பதிவு செய்தல், அரச வாகனப் பதிவிற்கான தனிப்பட்ட பதிவு எண்ணைக் கொண்ட அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய வசதி செய்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புகளை தானாகவே புதுப்பிக்கும் வசதிகளை மேம்படுத்துதல், தேவைகளுக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான வசதிகள் மற்றும் சட்டவிரோதமாக கிவ்.ஆர். குறியீடுகளை தயாரித்து பயன்படுத்தும் நபர்கள் கையாள்வதிலும் அமைச்சு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.