மனிதாபிமான முறையில் நடந்துகொள்ளுங்கள்-பாதுகாப்பு படையினரிடம் இந்தியா வலியுறுத்து

Admin
Nov 07,2022

இந்திய கடற்றொழிலாளர்களிடம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ளுமாறு இலங்கை பாதுகாப்பு படையினரிடம் இந்திய பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக உடனடி நடவடிக்கை தேவைப்படும் பிரச்சனைகளில், விரைவான தகவல் பகிர்வின் அவசியத்தை இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர் என்று இந்திய செய்தி தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 32வது சர்வதேச கடல் எல்லைக் கோடு கூட்டத்தில் அண்மையில் இடம்பெற்றது.

வங்காள விரிகுடாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு இலங்கை கடற்படை கப்பலான சயுராவில் நடத்தப்பட்டது

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாக்கு நீரணையில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

பாக்கு நீரணை என்பது தென்னிந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல் பகுதி என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கட்டளைத் தளபதி வெங்கட் ராமன் மற்றும் இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படைத் தளபதி தென்னக்கோன் ஆகியோர் இதற்கு இணைத் தலைமை தாங்கினர்.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை இலங்கை கடற்படையினரும், கடலோரக் காவல்படையினரும் கைது செய்து கைப்பற்றி வரும் நிலையிலேயே இந்த சந்திப்பின்போது இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.