கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 2 வாரம் தங்க முடிவு; அனுமதி வழங்க இலங்கை அரசு கோரிக்கை

Admin
Aug 07,2022

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் புரட்சி போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 13-ந்தேதி மாலைதீவுக்கு தப்பி சென்றார்.
பின்னர் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

கோத்தபய ராஜபக்ச வந்திருப்பதாகவும், தனிப்பட்ட பயணமாக அவருக்கு 14 நாட்கள் தங்கி இருக்க விசா வழங்கப்படுவதாகவும் அடைக்கலம் தரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

கோத்தபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விசா காலம் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் விசாவை மேலும் 2 வாரம் அந்நாட்டு அரசு நீடித்தது.

இதன்படி சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்ச வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும்.அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கி இருக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசு சிங்கப்பூர் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் சில நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவித்துள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் காரணம் என்று கூறி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைவரும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.