போதைப்பொருளுக்கு முடிவுகட்ட ஒன்றிணையுங்கள்; மாவை அவசர அழைப்பு

Admin
Nov 03,2022

தமிழர் வாழும் பிரதேசங்களில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் விநியோகத்தின் மையமாக வடக்கு மாகாணம் திகழ்கின்றது என்று நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வடக்கில் இளையோரைக் குறிவைத்து போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

எதிர்காலத்தில், எமது சமுதாயத்தை வழிநடத்துபவர்கள் இன்று போதைப்பொருள் பாவனையால் அழிந்துபோவதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே, வடக்கில் மட்டுமன்றி தமிழர் வாழும் பிரதேசங்களில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.