வலி.வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம்

Admin
Nov 02,2022

யாழ். வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பிலுள்ள ஆயிரத்து 600 ஏக்கர் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (02) புதன்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழைச் சந்தியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணியை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் வர்த்தமானி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்த காணிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டன. இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன. இவ்வாறு உள்ள காணிகளில் ஆயிரத்து 600 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சால், வலிகாமம் வடக்கு பிரதேச செயலருக்கு செப்டெம்பர் மாதம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்துக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்க நில அளவைத் திணைக்களத்துக்குப் பிரதேச செயலர் பாரப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

சிவில் அமைப்புக்களையும், அரசியல் கட்சிகளையும் இதில் பங்கெடுக்குமாறும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.