சுமந்திரன் சொல்லுக்கு யாரும் தலை சாய்க்கத் தேவையில்லை; வெடித்தது மோதல்

Admin
Oct 30,2022

தமிழரசுக் கட்சி சுமந்திரனுடையது அல்ல, அவர் சொல்லும் சொல்லுக்கு யாரும் தலை சாய்க்கத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கட்சி சார்ந்த விடயங்களை கட்சி அறிவிக்கும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று கூறியுள்ளார். இந்த விடயத்தை பொறுத்தவரையில் சிறீதரன் கூடிய விடயத்தை முற்றுமுழுதாக நான் ஏற்றுக் கொள்கின்றேன். கட்சி முடிவு என்பது மத்திய குழு அழைக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும். அந்த முடிவே இறுதியாக ஒரு முடிவாக இருக்கும்.

ஆனால் சுமந்திரனுடைய கருத்துக்கள் இப்போது தன்னிச்சையாக அமைகிறது. அது கட்சி முடிவு அல்ல. நான் தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி கூறவில்லை, தமிழ் தேசியம் தன்னிச்சையான முடிவுகளை ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறான முடிவுகள் கட்சிக்கு மட்டும் பாதிப்பு அல்ல. தமிழ் மக்களுக்கும் மண்ணுக்கும் நமது நிலத்திற்கும் மொழிக்கும் இது பாதிப்பு. சட்டத்திருத்தம் பாராளுமன்றில் அண்மையில் வாக்கெடுப்புக்கு விட்டபோது சுமந்திரன், வாக்களிக்காமல் வெளியேறி சென்று விட்டார். இந்த முடிவு எப்போது கட்சியில் எப்போது எடுக்கப்பட்டது. அவரே தன்னிச்சையா இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஒரு சிலரின் முடிவால், கட்சியினுடைய வளர்ச்சிக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்பதை மறக்க கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு மூத்த அரசியல்வாதி அவரை நாம் மதிக்கின்றோம். ஆனால் அவரின் வயது இப்போது அவரை செயற்பட முடியாமல் செய்து விட்டது. ஆகவே அவர் விலகுவது சிறந்தது.

சம்பந்தன் எப்போது விலகுவார், அந்தக் கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை. கட்சிக்குள் கொள்கைகள் மாறுமாக இருந்தால், நான் கட்சியை விட்டு வெளியேறுவேன். கட்சித் தலைமை சரியான தீர்மானங்களை எடுக்கா விட்டால், இவ்வாறு பலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, கட்சியையும், மக்களையும் திசை திருப்பி விடுவார்கள்.

கட்சித் தலைமை என கூறும் போது, தமிழரசு கட்சியின் தலைமை அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தான் முடிவுகளை எடுக்க வேண்டும். கட்சியில் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்த கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான், கட்சி கீழ் நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாக கூறிக் கொண்டு வருகின்றேன். இது தனிப்பட்ட கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அந்த கட்சியினுடைய அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கட்சித் தலைமையை மதிக்க வேண்டும்.

22 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும்போது, 179 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தார்கள்.

சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் வாக்களிப்பை புறக்கணித்து இருக்கிறார்கள். இது எதற்காக,நான் கட்சிக்குள்ளே வந்தது, இந்த மண்ணுக்கும் என்னுடைய தாய் மொழிக்கும் என்னால் செய்யக்கூடிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர வேறெந்த நோக்கமும் தனிப்பட்ட இலாபமும் கிடையாது. என்னுடைய சொத்துக்களை அறக் கட்டளை மூலம் மக்களுக்காக வழங்கப்போகின்றேன்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், தேசிய பட்டியல் தருமாறு நான் கேட்கவில்லை. ஆனால் தேசியப் பட்டியில் உள்வாங்கப்பட்டேன் தேசிய பட்டியலில் எனது பெயர் முதலாவதாக காணப்பட்டது. என்றாலும், அடுத்த நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தை அழைத்து, அம்பிகா சற்குணநாதனுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

பின்னர் சுமந்திரன், சம்பந்தனை சந்தித்து ஒரு முடிவு எடுத்து தேசிய பட்டியல் அம்பாறை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தவராசா கலையரசனை கொடுப்பதாக தீர்மானித்து அதனையும் ஊடகங்களை அழைத்து அறிவித்தார். மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் இவர் தீவிரமாக இருந்தார்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு தமிழ் தேசிய உணர்வுள்ள ஒருவர் தலைவராக வர வேண்டும்.- என்றார்.