சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்; சீமான்

Admin
Aug 07,2022

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருநாளும் இந்தியாவுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள், இந்தியாவுக்கெதிரான சீனாவிற்கே அவர்கள் ஆதரிக்கின்றனர் என்பதை மீண்டுமொரு முறை உறுதிசெய்துள்ளனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

யுவான் வாங் 5 என்ற சீன உளவுக்கப்பலின் அச்சுறுத்தல் குறித்த அவரது அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கையில் அனுமதியுடன் நிலைகொள்ள இருப்பது இந்திய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் எனவும் இக் கப்பல் தென்னிந்தியாவிலுள்ள ஆறு துறைமுகங்களையும் உளவு பார்க்ககூடிய வலுவுடையது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவை ஆளும் பாஜக அரசு தனது வலிமையான எதிர்ப்பை பதிவு செய்யாது வாயை மூடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருபுறம் இந்தியாவோடு உறவைப் பேணி, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மறுபுறம், சீனாவின் ஊடுருவலுக்கும், ஆக்கிரமிப்புக்கும் வழிகோலும் இலங்கை அரசின் செயல்பாடு இந்திய நாட்டுக்குச்செய்யும் பச்சைத்துரோகமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.