எந்தவொரு கட்சியும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையக் கூடாது - குமார் குணரத்தினம் எச்சரிக்கை

Admin
Aug 07,2022

மக்கள் ஆதரவு இல்லாத தற்போதைய அரசாங்கத்துடன் எந்தவொரு கட்சியும் சர்வகட்சி அரசாங்கத்திற்காக இணையக் கூடாதென சிறிலங்கா முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

புதிதாக பதவியேற்ற அதிபர் மற்றும் அரசாங்கம் மக்கள் ஆதரவு இல்லாமலே தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு தற்போது மக்களிடம் மாத்திரமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கத்தையே விரும்புகின்றது. எனினும், இந்த சர்வகட்சி அரசாங்க திட்டம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்பவோ அல்ல. மாறாக இலங்கை வாழ் குடிமக்களை அடக்குவதற்காகவே.
அரசாங்கத்திடம் எந்தவொரு பொருளாதார சீர்திருத்த திட்டங்களும் இல்லை

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு யோசனைகளும் தீர்வுகளும் இல்லை. மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, அரசாங்கத்திடம் எந்தவொரு பொருளாதார சீர்திருத்த திட்டங்களும் இல்லை.

இந்த நிலையில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவசரகால சட்டத்தையும் ஜனநாயகமற்ற சட்டங்களையும் அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.

அரசாங்கத்திற்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவளிக்காத அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும்.

மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.