இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறும் செயல்; ஆபத்தான சமிக்ஞை

Admin
Oct 23,2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய அறிவிப்பின் பிரகாரம் திருகோணமலை மூலோபாயம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால், அது இந்திய  இலங்கை ஒப்பந்தத்தினை மீறுவதாக அமையும் என்று கலாநிதி. தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை மீளாய்வு செய்வது தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதற்கு தயார் என்று இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளமையானது ஆபத்தான சமிக்ஞை என்றும் அவர் தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லா காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருக்கும் திருகோணமலை மூலோபாயம் அமுலாக்கப்படுமாக இருந்தால்இ திருகோணமலையில் இன விகிதாசாரம் மாற்றியமைக்கப்படும்.

அவ்வாறு இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீறப்படுகின்ற போது, அது பற்றி இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்காமல் இருப்பதற்கே இந்தியாவையும் இணைத்து திருகோணமலை மூலோபாயத்தினை முன்னெடுப்பதற்கு ரணில் திட்டமிடுகின்றார்.

அதிகாரங்களை பகிர்ந்தளிக்குமாறு கோரும் மேற்படி தரப்பினர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதற்கான கோரிக்கையை வலுவாக முன்வைக்க வேண்டும். அதற்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் இருப்பு மிகவும் முக்கியமானதாகின்றது.

அதுமட்டுமன்றி, இந்தியாவுடன் அதுபற்றி பேசுவதற்கு தயார் என்றும் கூறியிருக்கின்றார். இவர் ஏற்கனவே 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியவராக உள்ளார்.

ஆகவே, இவரது இந்தக் கூற்றுக்கள் ஆபத்தான சமிக்ஞையை வெளிப்படுத்துவதாக உள்ளன. எனவே, அதிகாரப்பகிர்வில் தற்போதைக்கு அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அதனை தக்கவைத்துக்கொள்வதற்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.