தமிழர்களின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல்கொடுப்போம்; ஸ்ரீதரனிடம் கமல்ஹாசன் உறுதி

Admin
Oct 18,2022

தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம்,  மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று சந்தித்து உரையாடினார்.

போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்பதாகவும் மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம்(தன்னாட்சி உரிமை) பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தங்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருவதாக சிறீதரன் தெரிவித்தார். 

தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது பற்றிக் கவலை தெரிவித்ததோடு தலைவர் கமல் ஹாசன் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல்கொடுக்கும் என்று உறுதியளித்த  கமல்ஹாசன் அவர்களுக்கு இலங்கையின் சமகால அரசியல் வரலாறு,பிரச்னைகள் குறித்தான ஆவணங்கள்,புத்தகங்களைப் பரிசளித்தார் சிறீதரன்.