"தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சி"

Admin
Oct 18,2022

தமிழ் பிரிவினைவாதிகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவே நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.

அத்துடன், பயனற்ற வகையில் நிதியினை வீணடித்த குற்றச்சாட்டில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு தனது ஆலோசகராக நியமிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹெரிக் சொல்ஹெய்மின் உண்மையான தொழில் என்னவொன்றால், தமிழ் பிரிவினைவாத குழுக்களுடன் ஜனாதிபதிக்கு தொடர்பினை ஏற்படுத்திக்கொடுப்பதே அவரின் நோக்கமாகும்.

பல்வேறு நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

ஆட்கடத்தல், ஆயுத வர்த்தம், தொல்பொருள் வர்த்தகம், பணச்சலவை செய்தல், உள்ளிட்ட பல வர்த்தகங்கள் வாயிலாகவே தமிழீழ விடுதலைப்புலிகள் வருமானத்தினை தேடிக்கொண்டனர்.

வருடத்திற்கு 100 மில்லியன் டொலர்களை வருமானமாக பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, யுத்தத்தினை செய்வதும், புலிகளின் வங்கி, புலிகளின் நீதிமன்றம், புலிகளின் காவல் துறை, ஆகியனவற்றை நடத்திச் செல்வதுமே செலவீனமாக காணப்பட்டது.

தற்போது விடுதலை புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருந்தாலும், வருமானம் தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றன.

இந்நிலையில், தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களின் கோரிக்கைகளை இந்நாட்டில் நிறைவேற்றி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்து பணத்தினை பெற்றுக்கொள்ளும் பொறுப்பே ஹெரிக் சொல்ஹெய்ம் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாதிகளின் பணம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டால் அதற்கு நாம் எதிர்ப்பினை வெளிப்படுத்த போவதில்லை. ஆனால் அவர்களின் விருப்பங்களை இந்நாட்டில் நிறைவேற்றுவது தவறாகும்.

நாட்டில் பட்டினியை போக்க யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டார்.