"நாம் 5 இலட்சம் தருகின்றோம் உறவுகளைத் தருவீர்களா ?"; கொழும்பில் உறவுகள் தெரிவிப்பு

Admin
Oct 17,2022

வடக்கு -கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டதின் போது யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி,சிவபாதம் இளங்கோதை  கருத்து தெரிவிக்கையில்:

சுமார் 13 வருட காலமாக நாம் வீதிகளில் அலைந்து திரிகின்றோம்.எங்களுக்காக குரல் கொடுக்க நாட்டில் யாரும் இல்லை.அதனால் தான் நாம் சர்வதேசத்தை நாடுகின்றோம்.ஆனாலும் இப்போது சர்வதேசமும் எமக்கு கண் துடைப்பாகவே காணப்படுகிறது.

இப்போது எமக்கு இலஞ்சம் கொடுக்க அரசு முனைகிறது.எங்களுடைய பிள்ளைகளின் பெறுமதி உங்களுக்குத் தெரியாது.எமக்கு உங்களின் இலஞ்சம் வேண்டாம்.இப்போது ஒரு உயிருக்கு 2 இலட்சம் ரூபா தருகின்றோம் என்று சொல்கிறார்கள்.இந்தப் பணம் எமக்கு வேண்டாம்.நாம் உங்களுக்கு 5 இலட்சம் தருகின்றோம்.எங்கள் பிள்ளைகளை எமக்கு திருப்ப தருவீர்களா என்றார்.