"ஈழத்திற்கான வழியை ஏற்படுத்தும் சூழ்ச்சி முன்னெடுப்பு"

Admin
Oct 16,2022

22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஈழ வரைப்படத்திற்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் இந்தியா உட்பட மேற்குலகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரிவினைவாத சக்திகளின் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

குணதாச அமரசேகர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச பிரிவினைவாத சக்திகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தின் போது, 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்தும் திருத்தங்களை உள்ளடக்கும் ஆபத்து தொடர்ந்தும் காணப்படுகிறது.

22 வது திருத்தச் சட்டத்தில் தற்போது உள்ள சரத்துக்கள் மூலம் முன்வைக்கப்பட்ட விடயங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் இந்தியா தலைமையிலான மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவும் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஊடாக கொடுக்கும் அழுத்தஙகள், காரணமாக அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய அழுத்தத்தில் இருந்து வருகிறது.

ஜனாதிபதி இரண்டு சந்தர்ப்பங்களிலும் நீதியமைச்சர் மற்றுமொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது மற்று்ம் இனப்பிரச்சினை தீர்வை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

இதற்காக மாகாண முதலமைச்சர்கள் முன்வைத்த யோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளனர். இந்த யோசனைகள் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த முன்வைக்கப்பட்ட யோசனைகள் என்பது இரகசியமானது அல்ல.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உட்பட புலம்பெயர் தமிழர்களால் வழிநடத்தப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு பேச்சாளர்களுக்கு அமைய தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு எனக் கூறப்படும் பிரிவினைவாத எதிர்ப்பார்பை நிறைவேற்றவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் அவர்கள் முன்வைக்கும் ஒரே யோசனை 13 வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி சமஷ்டி நாட்டை உருவாக்குவதே அவர்களின் ஒரே நோக்கம். அத்துடன் அது தமிழீழத்திற்கான வழி வரைப்படத்தின் பிரதான மைல் கல்.

எனினும் 13 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக காணப்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக அதனை முற்றாக நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க, சில அரசியலமப்பு ரீதியாக தடைகளை ஏற்படுத்த ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு நேரிட்டது.

இதனால், இதுவரை மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம், முதலமைச்சர் நிதி அதிகாரம் ஆகியன நடைமுறையில் இல்லை. இதனால், அவற்றை நிறைவேற்றி பிரிவினைவாத வரைப்படத்தின் ஊடாக முன்நோக்கி செல்வதில் அரசியலமைப்பு ரீதியாக தடை காணப்படுகிறது.

இதன் காரணமாக பிரிவினைவாத சக்திகளை மகிழ்விக்க வேண்டுமாயின் அந்த அரசியலமைப்பு தடைகளை அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நீக்க வேண்டும். அப்படியான திருத்தங்களுடன் திருத்தச் சட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டால், அதற்கு பாரிய மக்கள் எதிர்ப்பு ஏற்படும் என்பதுடன் அந்த திருத்தச் சட்டம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகும்.

இதனை தவிர பிரிவினைவாத போரில் உயிரிழந்த, கைக்கால்களை இழந்த சுமார் 60 ஆயிரம் படையினர், அவர்களின் உறவினர்கள் அதனை எதிர்ப்பார்கள்.

ஆரம்பத்தில் இந்திய- இலங்கை உடன்படிக்கை மற்றும் மாகாண சபை சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை போராட்டம் காரணமாக கொல்லப்பட்ட 60 ஆயிரம் இளைஞர், யுவதிகளின் கொள்கை நோக்கத்தில் பிடிப்புக்கொண்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்ப்பும் ஏற்படும்.

22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது, 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் திருத்தங்கள் தந்திரமான முறையில் உள்ளடக்கப்படலாம்.அதற்கு தடையாக இருக்கும் அரசியலமைப்பு ரீதியான தடைகள் நீக்கப்படலாம் என்ற நியாயமான சந்தேகத்திற்கும் அப்பால், அரசியல் யதார்த்தம் இருப்பது மிகவும் தெளிவானது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய அமைப்பு என்ற ரீதியில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதன் காரணமாக 22 வது திருத்தச் சட்டம் தோல்வியடைவதை தவிர்க்க அது சம்பந்தமான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு நேரிட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் தமக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக சிறந்த வழியில் அல்லது கெட்ட வழியில் 13 வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்தும் கடுமையாக முயற்சிகளை எடுக்கக்கூடும் எனவும் குணதாச அமரசேகர அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.