மீண்டும் பிரதமராகிறார் மகிந்த?; பிறந்தநாள் பரிசளிக்க மொட்டு அணியினர் தீர்மானம்

Admin
Oct 10,2022

 மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்தநாளாகும். அன்றைய தினம் அவருக்குச் சிறப்பு பரிசாக பிரதமர் பதவியை வழங்குவதற்குப் பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.

பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்கக் கோரும் கடிதத்தில் அந்தக் கட்சி உறுப்பினர்கள் கையொப்பங்களை இடுகின்றனர்.

பெரும்பான்மை (113) உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததும் மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியை அவர்கள் கோருவர் என்று தெரியவருகின்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு தமது சம்மதத்தை அளித்துள்ளனர் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.