இலங்கைக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல; வி.உருத்திரகுமாரன்

Admin
Oct 07,2022

இலங்கை தொடர்பில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைக்கு தோல்வியாக இருந்தாலும், தமிழர்களுக்கு வெற்றியல்ல என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களுக்கு எதிரான பாரிய மனித உரிமைமீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இத்தீர்மானம் வழியமைக்கவில்லை என்பதோடு, தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இலங்கையின் இனப்படுகொலை இராணுவமானது, பொறுப்புக்கூறலுக்கான அச்சமேதுமின்றி, தமிழர்கள் எதிரான தனது பாரிய மனித உரிமைமீறல்களை தொடரவே வழிசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.

இன்று செப்-6 வியாழக்கிழமை இலங்கைஇரண்டு ஆண்டுகள் காலநீடிப்பு வழங்கும் வகையில் சபையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான 51/1 தீர்மானத்துக்கு 20 நாடுகள் ஆதரவாகவும், 7 எதிராகவும் வாக்களித்திருந்தன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழர் அரசியல் தரப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்புக்கூறவைக்க சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துமாறு வேண்டப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கை புறந்தள்ளப்பட்டு, இலங்கைக்கு மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது ஐ.நா எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதன் தார்மீகத்துக்கு மாறாக அமைந்துள்ளதோடு, அரசுகள் தமது பூகோள புவிசார் நலன்களை அடைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் அநீதி இழைப்பதாகவே உள்ளது.

இந்தியா மீண்டும் வாக்களிக்காமல் விலகியதால் ஈழத் தமிழர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இலங்கை தனது சீனத் துரும்புச்சிட்டையை நன்றாக கையாண்டு அதன் அண்டை நாடான இந்தியாவை பயமுறுத்தி அமைதியாகி விட்டது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், பிராந்திய வல்லரசான இந்தியாவும், உலக வல்லரசும் தார்மீகக் கோட்பாடுகள், துணிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் என்று ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்த்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி இறுதிப்போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட 70,000 பேர் விடயத்தை புறந்தள்ளிவிட்டு, தென்னிலங்கை கிளர்ச்சியில் உயிரிழந்த 10 பேருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசத்தின் மீதான சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பானது சிங்களமயமாக்கலுக்கும் பௌத்தமயமாக்கலுக்கும் அரணாக இருப்பதுடன், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்டுகிறது. குறைந்பட்சம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தமிழர் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை குறைப்பதற்கும், வெளியேறுவதற்கான கால அட்டவணை அமைந்திருக்க வேண்டும்  எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவுக்கு அப்பால் சர்வதேச ஜனநாயக சட்டவெளியில் நீதிக்கான புதிய புதிய களங்களை உருவாக்க முனைவதோடு, சிறிலங்காவினால் நிராகரிக்கப்பட்ட ரோம் உடன்படிக்கையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை அரசியல் இறைமையுள்ள ஓர் தேசமாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை ஏற்றுக் கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.