ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Admin
Oct 06,2022

ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இந்தியாவும் ஏனைய உறுப்புநாடுகளும் ஆதரவளிக்கவேண்டும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச அனுசரணையுடனான சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்ற விடயங்களை மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இணைத்து அந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிராந்திய நாடு என்ற அடிப்படையில் வளர்ந்துவரும் வல்லரசு என்ற அடிப்படையில் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டிய தார்மீக கடப்பாடு இந்தியாவிற்குள்ளது- அவ்வாறான நீதிமூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படமுடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.