ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) – அரை கப்
முட்டை – 1
பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி – 2
லீக்ஸ் (பச்சை இலை) – கைப்பிடியளவு
மஞ்சள் கோவா – கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக
சிறிய தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – ஒரு இணுங்கு
(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.)
செய்முறை
ஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி
3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும்.
வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை உங்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஒருதரம் செய்து பார்த்தால் பொருட்களின் அளவையும் அவை வேக வேண்டிய நேரத்தையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். இதில் முக்கியமானது அடிக்கடி பிரட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஊரில் இந்த மரக்கறிகள் தான் போடுவார்கள். புலத்தில் வேறு மரக்கறிகளும் சேர்க்கிறார்கள்.
நேரம் கிடைக்கும்பொழுது அடிக்கடி செய்வேன். சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.