திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச

Admin
Oct 03,2022

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடியமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும்.

தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் சமூக ஊடகங்களிலும் திலீபன் கொண்டாடப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

திலீபனின் நினைவேந்தல்கள் பகிரங்கமாக நடத்தப்படும் போது இராணுவ பொலிஸார் ஏன் மௌமான இருந்தனர்.”என கூறியுள்ளார்.

யாழ்.குடாநாட்டை இந்திய அமைதிப்படை ஆக்கிரமித்திருந்த நிலையில், 987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து, திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து முப்பத்தைந்து வருடங்களாகின்றன.

அரச படையினரால் பல தடவைகள் தகர்க்கப்பட்ட நல்லூரில் உள்ள திலீபன் நினைவுத் தூபிக்கு அருகாமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மாவீரரின் பெற்றோர்களின் பங்களிப்புடன் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நினைவுத்தூபிக்கு முன்பாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இம்முறை முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாண குடாநாட்டைச் சுற்றி வாகன பேரணி ஒன்றையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

திலீபன் நினைவேந்தல் ஆரம்பமாகியிருந்த நிலையில், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொரு நபரையும் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த இனத்தவர்களுக்கு நினைவு கூறுவதில் எவ்வித தடையும் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தியும், இன வேறுபாடுகளை தூண்டி ஒரு சார்புடையதாகவும் இருக்கக் கூடாது எனக் கூறிய பிரதமர், அவ்வாறு மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற போதிலும், அரசு பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியே வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பொத்துவிலில் இருந்து நல்லூருக்கு சென்ற வாகன ஊர்வலத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன தொடரணியை இடைமறித்த பொலிஸார், திலீபனின் உருவம் பொறிக்கப்பட்ட வாகனங்களில் பயணித்த அனைவரின் பெயர்களையும் ஊர்களையும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விமல் வீரவன்ச, திலீபனை நினைவு கூறுவோரை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் இவர் வடக்கில் இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கை ஆக்கிரமித்திருந்த போது அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் பிரிவின் வீரராவார்.

பின்னர், அந்த முன்னணியில் இருந்து பிரிந்து ராஜபக்ச ஆதரவாளராக ஆட்சிக்கு வந்த வீரவன்ச, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சில நாட்களில் அதனை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.