ராஜபக்சக்கள் வஞ்சகர் என்பதை ஜனாதிபதி விரைவில் உணர்வார்- இராதாகிருஸ்ணன்

Admin
Sep 26,2022

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அக்கரபத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நல்லவர், இன்றும் அவரை நாம் மதிக்கின்றோம். ஆனால் அவர் இன்று இருக்கும் இடம்தான் சரியில்லை. அதாவது தனி ஆளாக இருப்பதால், செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்துள்ளார்.

ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் அவர் உணர்வார். மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சக்களின் சொல்கேட்டே ஜனாதிபதி ரணில் இதனை செய்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைவதற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஆணை இல்லாத இந்த ஆட்சியை அங்கீகரிப்பதற்கு நாம் தயாரில்லை. சர்வதேச சமூகம்கூட இந்த அரசாங்கத்தை ஏற்கவில்லை. மக்கள் ஆணையுடன் புதிய அரசாங்கமொன்று அமைய வேண்டும். அவ்வாறு அமையும் அரசாங்கத்துக்கு நாம் ஆதரவு வழங்குவோம்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை பொலிஸார் தாக்கியுள்ளனர். குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தாமல், தடியடிகூட நடத்தியுள்ளனர். இந்த அடக்குமுறை செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதென வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் உரையாற்றுகின்றார். ஆனால் அமைதியாக போராடும் சுதந்திரம்கூட நாட்டில் இல்லை.

எதிர்காலத்தில் போராட முடியாத வகையில் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அடக்குமுறையின் உச்சகட்டம். அதனை எதிர்க்கின்றோம். ஜனநாயகம் இல்லாத அதேபோல அடக்கி – ஒடுக்கி ஆளும் அரசாங்கத்துக்கு உலக நாடுகள் உதவாது என்பதை புரிந்து செயற்பட வேண்டும்.

தேசிய பேரவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. ஜே.வி.பி, சுதந்திரக்கட்சி என்பனவும் மறுத்துள்ளன. நாமும் அதனை ஏற்கவில்லை. பெயர் இடம்பெற்றுள்ளமை தமக்கு தெரியாது என விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மனோ கணேசன் வெளிநாட்டில் உள்ளார். அவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.” – என்றார்.