'மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்'

Admin
Sep 21,2022

இந்தியா அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளதுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியா அத்துடன் நின்றுவிடாமல், இலங்கை அரசுடன் நேரடியாக உரையாடல்களை மேற்கொண்டு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை என்பது இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றது. இதனைத் தீர்ப்பதற்காக சமஸ்டி அரசியலமைப்பு கோரிக்கையை முன்வைத்து எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அறவழிப் போராட்டத்தை நடத்திவந்தார்.
இதன் காரணமாக தமிழர் தரப்பிற்கும் சிங்கள அரசிற்குமிடையில் இரண்டு உடன்படிக்கைகள் எட்டப்பட்டிருந்தன. டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம் என்றழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தங்கள் சிங்கள தரப்பால் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்டன.
இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது.
1983ஆம் ஆண்டு மிகப் பாரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டபொழுதும், இந்திய அரசு தலையிட்டு தமது நல்லெண்ணத் தூதுவர்களை அனுப்பி தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டியது அவசியம் என்று இந்தியா கருதியது.
இந்த நிலையில்தான் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்காக தமிழ் இளைஞர் இயக்கங்களால் ஆயுதப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதுவும் இலங்கை அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தினால் ஒடுக்கப்பட்ட சூழ்நிலையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில், இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அதுவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தனது அரசியல் சாசனத்தில் 13ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.
ஆனால் இந்த 13ஆவது திருத்தம் என்பது அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒப்புதலுடனோ, ஏனைய தமிழ் இயக்கங்களின் ஒப்புதலுடனோ அல்லது இந்தியாவின் ஒப்புதலுடனோ கொண்டுவரப்படவில்லை.
மாறாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் தனது ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன், தான் விரும்பியவாறு 13ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தார் என்பதே உண்மை நிலவரமாகும்.
அது இலங்கை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும்கூட, வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் வரலாற்றுப்பூர்வ வாழ்விடம் என்பதை ஏற்றுக்கொண்டும், சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டும், மத்தியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள இலங்கை அரசு முன்வந்தது.
அந்த அதிகாரப்பகிர்வு என்பது முழுமைபெறவில்லை என்பதுடன், மஹிந்த ராஜபக்ச போன்றோர் 1310 என்று கூறி அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, பிரேமதாச போன்ற ஜனாதிபதிகளும் 13ற்கு அப்பால் சென்று பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமென்று கூறியிருந்தார்கள்.
இவ்வாறெல்லாம் பேசப்பட்டதே தவிர, நடைமுறையில் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சகல இலங்கை அரசாங்கங்களும் பின்னடித்தன. இன்றும் பொலிஸ் அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன, காணி அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. மாகாணத்திற்கு உரித்தான நிர்வாக அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்படுகின்றனவே தவிர, அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இவ்வாறு பல குறைபாடுகள் இருந்தாலும்கூட, மாகாணசபை முறைமையும் அதிகாரப்பகிர்வும்தான் இப்பொழுது தமிழ் மக்களின் கைவசம் உள்ள சட்டபூர்வமான தீர்வாக இருக்கிறது.
எனவே நாம் ஒரு சமஸ்டித் தீர்விற்காகப் போராடிக்கொண்டிருக்கும் அதேசமயம், சட்டபூர்வமாக எமக்குக் கிடைத்திருக்கக்கூடிய அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியா கோருவது வரவேற்கக்கூடிய ஒரு விடயம்.
2022ஆம் வருடத்தின் ஆரம்பகாலகட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருந்தோம்.
அதனை ஏற்றுக்கொண்டு இந்திய அரசும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினூடாக மிகத் தெளிவாக சில விடயங்களைக் கூறியுள்ளது. 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் அது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முன்னேற்றம் காணப்படவேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இந்தியாவின் அண்டை நாடு மற்றும் நட்பு நாடு என்ற அடிப்படையில், இலங்கை அரசிற்கு எதிராக கிளர்ச்சிகள் ஏற்பட்ட சமயங்களிலும் சுனாமி போன்ற பாரிய பேரிடர் ஏற்பட்ட சமயங்களிலும் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்ததுடன் மிகப்பெரும் உதவிகளையும் செய்துவந்துள்ளது.
இன்று பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கம் அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் சமயத்திலும் ஏறத்தாழ 4பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து இலங்கைக்கு உதவிகரமாக இந்தியா செயற்பட்டு வருகின்றது.
அண்டை நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இலங்கைக்கு இந்தியாவால் பல்வேறுபட்ட உதவிகள் கிடைத்து வருகின்றன. அதேசமயம், இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி, சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதிலும் இந்தியா கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.
எட்டுகோடி தமிழ் மக்களை உள்ளடக்கி 130 கோடி மக்களையுக் கொண்ட எமது அண்டைநாடான இந்தியாவை எமது நட்பு சக்தியாக வைத்திருப்பதன் ஊடாகவே, தமிழ் மக்களுக்கு அரசியல் பொருளாதார ரீதியாக ஒரு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.
எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தமில்லாதவர்களும் போராட்டத்தின் உண்மையானதும் முழுமையானதுமான வரலாறு தெரியாதவர்களும், பிராந்திய உலக அரசியலை சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளாதவர்களும் இந்தியாவை குற்றம் சாட்டுவதும் இந்தியா தமிழ் மக்களுக்கு விரோதமாக நடக்கின்றது என்று பேசுவதும் அர்த்தமற்ற, பொறுப்பற்ற, விஷமத்தனமான குற்றச்சாட்டுகளாகும்.
எமது உரிமைகளை வென்றெடுக்க எமக்குப் பலமான ஒரு சக்தியின் ஆதரவு தேவை. அது எமது அண்டை நாடான இந்தியாவைத் தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது. இந்தியா தனது பாதுகாப்பின்மீது அதிக கரிசனை கொண்டிருக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் நலன்களைக் காத்துக்கொண்டு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதிலும் இலங்கை அரசுடன் நட்புறைவைப் பேணவேண்டும் என்பதிலும் இந்தியா கரிசனையுடன் இருக்கின்றது.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை அது உருவாகியபோது உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா நேரடியாக இலங்கையுடன் பேசி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈழத் தமிழர்களின் சார்பாக வேண்டி நிற்கின்றோம்.- என்றுள்ளது.