"இலங்கையின் நண்பர்கள் இலங்கைக்கு உதவவேண்டிய தருணம்"

Admin
Sep 20,2022

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையானது உணவுப்பாதுகாப்பிலும் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் நண்பர்கள் இலங்கைக்கு உதவவேண்டிய தருணம் இதுவாகும். நீங்கள் நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு டொலரும் ஒரு உயிரைக் காப்பதற்கும், ஒரு குடும்பத்திற்கு உணவளிப்பதற்கும், ஒரு சிறுவனுக்கு அவசியமான கல்வியை வழங்குவதற்கும் உதவும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

அதாவது, மிகமோசமான பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இயலுமான நிதியுதவியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திட்டத்தின் அலுவலகம் என்பன ஏற்கனவே கோரிக்கைவிடுத்திருந்ததுடன் அதற்கெனப் பிரத்யேகமாக இணையப்பக்கமொன்றும் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்நன்கொடை கோரிக்கையை மீளவலியுறுத்தி வெளியிட்டிருக்கும் காணொளியொன்றிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்காணொளியின் ஊடாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாகப் பணியாற்றிய கடந்த 4 வருடகாலத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களில் இலங்கை அடைந்த முன்னேற்றத்தை என்னால் அவதானிக்கமுடிந்தது.

குறிப்பாக, கடந்த 2015 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் போலியோ, தாயிடமிருந்து குழந்தைக்கு ஏற்படும் எயிட்ஸ் நோய்த்தொற்று என்பன முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அறிவித்தது. கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும், சுதந்திரமடைந்ததன் பின்னர் தற்போது இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அதன்விளைவாக ஏற்கனவே அடைந்துகொள்ளப்பட்ட மேற்குறிப்பிட்ட விடயங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.

இப் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையானது உணவுப்பாதுகாப்பிலும் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இலங்கையின் நண்பர்கள் இலங்கைக்கு உதவவேண்டிய தருணம் இதுவாகும்.

உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அவசியமான மருந்துப்பொருட்களை வழங்குவதற்கும் அனைத்து சிறுவர்களுக்கும் கல்விக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எமக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகின்றது.

நீங்கள் நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு டொலரும் ஒரு உயிரைக் காப்பதற்கும் ஒரு குடும்பத்திற்கு உணவளிப்பதற்கும் ஒரு சிறுவனுக்கு அவசியமான கல்வியை வழங்குவதற்கும் உதவும்.

இது நன்கொடைகளை வழங்கவேண்டிய தருணமாகும். இது இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஒன்றிணையவேண்டிய தருணமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.