வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தலைவரின் வீட்டிற்கு சிவப்பு எச்சரிக்கை

Admin
Sep 20,2022

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்த வல்வெட்டித் துறைப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதனம் எவராலும் பராமரிப்பற்ற நிலையில் இருப்பதால் நுளம்பு பெருகும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளமையால் இந்த ஆதனத்தின் உரிமையாளர் அல்லது பராமரிப்பாளர் எவரும் இருப்பின் உடனடியாக துப்புரவு செய்து நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி நாளை மறுதினம் 22 ஆம் திகதிக்குள் 0212263973 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தவும்.

இல்லையெனில் இவ்வறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் இந்த ஆதனம் எம்மால் பொறுப்பேற்கப்படும் எனத் தெரிவித்து வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரால் சிவப்பு எச்சரிக்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் இராமச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது;

அந்தப் பகுதி மக்களால் எமக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன .உடனடியாக துப்பரவுக்கு முற்பட்டால் பொலிஸ் , இராணுவப் பிரச்சினைகள் ஏற்படும் சிவப்பு அறிவித்தலை காட்சிப்படுத்தி அதன் பின்னர் நகரசபை அதனை தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் . காணியின் உரிமையாளர்கள் எவரேனும் பின்னர் உரிமை கோரும் பட்சத்தில் அதற்குரிய பராமரிப்புச் செலவுடன் மீள வழங்கப்படும் என்றார் . 

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான , எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கும்போது , வல் வெட்டித்துறையில் எத்தனை காடுகள் பற்றைகள் வளர்ந்துள்ளன ? அனைத்துக்கும் நகரசபையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா ? நானே குறித்த காணியைப் பொறுப்பெடுத்து துப்புரவு செய்கின்றேன் என்றார்.