ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியுடன் சுமந்திரன் பேசிய விடயம் என்ன?

Admin
Sep 20,2022

ஜெனிவா சென்றிருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பிரேரணை தொடர்பில் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டேவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று இந்தியப் பிரதிநிதி மணி பாண்டே சுட்டிக்காட்டியிருந்தார்.

அவ்விடயம் இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையில் பின்னணியைத் தெளிவுபடுத்தும் முன்னுரைப் பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் செயற்பாடு அவதானிப்புகள் தொடர்பான பந்திக்கு மாற்றுமாறு சுமந்திரன் ஏற்கனவே இணை அனுசரணை நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மணி பாண்டேவைச் சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பிரேரணையை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்."