திலீபனுடைய நினைவேந்தலினை ஒழுங்கமைக்க ஏற்பாட்டுக்குழு தெரிவு!

Admin
Sep 20,2022

தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலினை தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக மக்கள் எழுச்சியாக முன்னெடுக்கும் முகமாக இன்றைய தினம் நல்லூர் திருஞான சம்மந்தர் ஆதீனத்திலே இந்த நினைவு தினத்தினை ஒழுங்கு செய்கின்ற ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதில் 15 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலினை எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல், யாரும் இதனை சுயலாபத்திற்கு பயன்படுத்தாத வகையிலே ஒட்டுமொத்த தமிழினமாக எங்களுடைய விடுதலைக்கான பயணமாக முன்னெடுப்பதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளை இதய சுத்தியோடும் ,தூய்மையான மனதோடும் முன்னெடுக்க இருக்கின்றோம்.

இந்த நினைவேந்தல் கட்டமைப்பிலே மத குருமார்கள் , பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய சங்கங்களின் பிரதிநிதிகள்,மாவீரர்களுடைய பெற்றோர்கள்,முன்னாள் போராளிகள் ,அரசியல் கைதிகளுக்காக இயங்கக்கூடிய குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய பிரதிநிதிகள் ,சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தினுடைய பிரதிநிதிகள் போன்ற பலர் இருக்கிறார்கள்.

காலத்தின் தேவை கருதி விரைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய கூட்டம் இந்த கட்டமைப்பு தெரிவிலே நிறைவடைந்திருக்கின்றது.

இன்றிலிருந்து இந்த கட்டமைப்பு ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுக்க இருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் பரப்பிலே இருக்கின்ற கட்சித் தலைவர்களை சந்த்தித்து அவர்களின் ஆதரவினை பெற்றுக்கொண்டு ,ஏனைய சிவில் அமைப்புக்கள் மக்கள் இயக்கங்களின் ஆதரவினையும் பெற்றுக்கொண்டு நினைவேந்தலை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றி தொடர்ந்து நாங்கள் செயற்பட இருக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.