இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது; ஜெனீவாவில் சுமந்திரன் எடுத்துரைப்பு

Admin
Sep 17,2022

இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவில் இறுக்கம் போதாது எனவும் ஆகவே அந்த வரைவு இலங்கைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை  கொடுக்கும் வகையில் பலப்படுத்தப்படவேண்டுமென்றும் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,இலங்கைக்கு இனியும் கால அவகாசம் கொடுப்பதை சர்வதேச சமூகம் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.குறிப்பாக இங்கு (ஜெனீவா)நடைபெறுகின்ற பக்க அமர்வுகள்,மீளாய்வு கூட்டங்களில் கலந்துகொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.இன்று (நேற்று) நடைபெற்ற மீளாய்வு கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசியிருந்தேன்.இந்த கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதியும் கலந்து கொண்டு பேசியிருந்தார்.அவர் பேசுகையில்,இலங்கை இன்று எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது எனக்கு 3 நிமிடங்கள் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.அந்த சந்தர்ப்பத்தில்,இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டுமென கோரிக்கை முன்வைத்தேன்.கடந்த 13 வருடங்களாக இலங்கை அவகாசத்தை கோரி வருகிறது. ஆனால்,இந்த 13 வருடங்களில் எந்த முன்னேற்றத்தையும் இலங்கை செய்திருக்கவில்லை.13 வருடங்களாக உறவுகளை தொலைத்த குடும்பங்கள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. தங்களுடைய (இலங்கை)அறிக்கைகளையே அமுல்படுத்தாமல் இருக்கும் இலங்கை,எவ்வாறு சர்வதேசத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்பது தொடர்பில் சர்வதேச சமூகம் சிந்திக்கவேண்டும். சர்வதேசத்துக்கு கடந்த 13 வருடங்களாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் தட்டிக்கழிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே,இலங்கைக்கு மீண்டும் மீண்டும் கால அவகாசத்தை வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இழந்துவிடக்கூடாது.

ஆகவே வரவிருக்கும் பிரேரணை இலங்கை அரசாங்கத்தை கடும் அழுத்தத்தை கொடுப்பதாக அமைவதுடன்,புதிய பிரேரணையை பலப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகள் உதவி செய்ய வேண்டுமென   கேட்டுக்கொண்டேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.