தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு: ஐ.நாவில் எடுத்துரைப்பு

Admin
Sep 17,2022

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும், சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

கூட்டத் தொடரின் ஐந்தாம் நாளான செப்ரெம்பர் 16 வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த ( Special Rapporteur on the promotion of truth, justice, reparation and guarantees of non-recurrence) உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை தொடர்பான கருத்தாடலிலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

காணொளி வாயிலாக பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கைத்தீவில் பாரிய அட்டூழியங்களை எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் தமிழர்களுக்களாகிய எமக்கு, ஐ.நாவின் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான சிறப்பு அறிக்கையாளரது அறிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஐநாவின் உள் ஆய்வு அறிக்கையின்படி, இலங்கையின் போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாரிய குற்றங்கள் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் சிறிலங்காவின் சூழலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பரிந்துரைத்து அழைப்பு விடுத்திருந்தார். 

இதற்கு முன்னர் இருந்த அனைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர்களும் இதனை வலுப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினர் எந்த தயக்கமும் இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்பேற்ற வேண்டிய தேவை இல்லை என்ற நிலையில, அதனைச் செய்யத் துணிந்துவிடுவார்கள்.

இவைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்விற்கான சர்வதேச மத்தியஸ்தம் உட்பட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. நீண்ட காலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும், சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.

நடைபெற்று வரும் ஐ.நா கூட்டத் தொடரில் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை வெளிப்படுத்தும் வகையில் கருத்துரைகளை சபையில் தொடர்சியாக வெளிப்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.