ஜெனீவா அமர்வில் பொருளாதார குற்றத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை- சஜித் அணி குற்றச்சாட்டு!

Admin
Sep 16,2022

இலங்கையானது வரலாற்றில் முதல் தடவையாக ஜெனீவா அமர்வில் பொருளாதார குற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜெனீவா அமர்வில் இலங்கையில் ஏற்பட்ட நிலவரம் தொடர்பில் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா அமர்வு என்று வரும்போது, மனித உரிமைகளை மீறியமை, அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்தமை, நீதியை நிலைநாட்டாமை, ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்த விடயங்களே எதிரொலித்தன.

இன்று இலங்கைக்கு எதிராக புதிய பிரேரனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இன்று சகலரும் மௌனித்து போயுள்ளனர்.

யுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட ராஜபக்ஷர்களே இன்று நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று 220 இலட்சம் மக்களும் நாளுக்கு நாள் பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பதன் காரணமாகவே, இலங்கைக்கு எதிராக ஜெனீவா அமர்வில் பொருளாதார குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அதற்கு சகலரும் வாய்மூடிகொண்டு இருக்கின்றனர்.

220 இலட்சம் மக்களும் இன்று பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தரப்பினராக உள்ளனர்.

வரிசையில் நின்றுக்கொண்டு, இருளில் இருந்துகொண்டு, பட்டினியில் இருந்துகொண்டு வாடும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உணவு பணவீக்கம் நூற்றுக்கு 93 சதவீதம் அதிகரித்தமையானது மஹிந்த ராஜபக்ஷவினர் ஏற்படுத்திய பொருளாதார குற்றத்தின் விளைவாகும்.

சிறுவர் மந்தபோசணை நாட்டுக்குள் ஏற்பட்டமைக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஏற்படுத்திய பொருளாதார குற்றமே காரணமாகும் என தெரிவித்தார்.