கொழும்பில் மீண்டும் களமிறங்கிய பிக்குகள்

Admin
Sep 08,2022

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்கு மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீ போதிராஜா மாவத்தையில் இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் நாட்டில் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிக்குகள் கலந்து கொண்டுள்ளதுடன், தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கி பதாதைகளையும் தாங்கியுள்ளனர்.

இதேவேளை நடிகை தமித்தா அபேரத்ன, நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்தமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல்களில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் நேற்றையதினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்கு மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் ஒன்றையும் விடுத்திருந்தனர்.

குறிப்பாக காவல்துறையினருக்கு அறிவிக்காமல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.