போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை வன்மையாக கண்டிக்கும் ட்ரான்ஸ்பேரன்சி அமைப்பு

Admin
Sep 06,2022

நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது வன்மையாக கண்டிக்கிறது.

இந்நிலையில்,எந்தவொரு சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் TISL நிறுவனமானது தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.

மேலும், ஊழலற்ற நாட்டினை உருவாக்கும் நோக்குடன் குரலெழுப்பிய பொதுமக்களை தன்னிச்சையாகவும் நியாயமான சந்தேகங்களுக்கு இடமின்றிய நிலையிலும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய சட்ட ஏற்பாடுகளை தவறாக பயன்படுத்துவதனை TISL நிறுவனமானது உன்னிப்பாக அவதானிக்கிறது.

சட்டத்தின் இத்தகைய தன்னிச்சையான பிரயோகமானது பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பின்பற்ற தயக்கம் காட்டும் நிலைமையினை உருவாக்கும் அதேவேளை இவை நாட்டிற்கு மோசமான விளைவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.

நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் ஆகியவற்றை புறக்கணித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற கைதுகள் மற்றும் விசாரணைகளூடாக நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிறைவேற்றதிகாரம் மற்றும் அரச அதிகாரங்கள் என்பன துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கருதப்படலாம்.

சட்டத்தின் பார்வையில் ஒவ்வொரு குடிமகனும் சமமானவர்களே ஆகவே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை அடக்கும் ஆயுதமாக சட்டத்தினை பயன்படுத்தக் கூடாது.

எவ்வாறாயினும், இன்றைய கால கட்டத்தில் பாரியளவான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை ஏனையவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் முழு வலிமையையும் பிரயோகிக்கப்படுகின்ற போது சட்டத்தின் பயன்பாடானது மக்களிடையே சமமாக நிலைநாட்டப்படவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதில் நிறைவேற்று அதிகாரத்தில் இருப்போர் பொறுப்புக்கூற வேண்டும் என TISL நிறுவனம் வலியுறுத்துகின்றது.

ஊழலை ஒழித்து உண்மையான முறைமை மாற்றத்தினை உருவாக்கும் நோக்குடன் சட்ட வரம்பெல்லைகலுக்குள் உட்பட்டு, குரல் எழுப்பிய பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களுடன் TISL நிறுவனம் கைகோர்கிறது.

அத்ததுடன், தடுப்புக்காவல் உத்தரவுகளை ரத்து செய்து, பொதுமக்கள் தமது அடிப்படை உரிமைகளை பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல் சுதந்திரமாக அணுகக்கூடிய ஓர் ஜனநாயகமான சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை TISL நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.