பயங்கரவாத தடை சட்டத்தை தவிர்க்குமாறு சட்டத்தரணிகள் சம்மேளனம் கோரிக்கை

Admin
Sep 05,2022

அடிப்படை உரிமை போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சம்மேளனம், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,

இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து வைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது உட்பட எழுந்துள்ள சட்டத்தின் ஆட்சி பிரச்சினைகளை, தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

சட்டத்தின் கீழ் தனிநபர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பொதுநலவாய நாடுகளின் அர்ப்பணிப்பு தொடர்பான ஹராரே பிரகடனம் 1991 க்கு இணங்க, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைக்கு, இலங்கையும் இணங்கியுள்ளதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முக்கிய பங்கை சம்மேளனம், பாராட்டியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் திட்டமிட்ட எல்லைக்கு அப்பால் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை இலங்கை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தடை செய்துள்ளது. ஆயினும்கூட, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் தடையின்றி தொடர்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.