மாற்றுத்தலைமைக்கான அவசியம்

Admin
Dec 08,2023

ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட விவாதம் ஒன்று அந்நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெறிருக்கிறது.மேற்படி விவாதத்தில் ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, வன்முறை மற்றும் இனப்படுகொலையின் சுழற்சியுடன் துரதிர்ஷ்டவசமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் உயிர் பிழைத்த தமிழர்களைத் துன்புறுத்துவதாக  தெரிவித்தார். மேலும்,இலங்கையில், இனப்படுகொலை தமிழ் சமூகத்தின் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை இழக்க வழிவகுத்தது மட்டுமல்லாமல், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழ் குடும்பங்களின் பாரிய இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது,  2009 ஆம் ஆண்டில் நடந்த போரில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு கொன்றது. அவர்கள் பாதுகாப்பான வலயமாக நியமிக்கப்பட்ட ஒரு சிறிய நிலப்பகுதிக்கு அனுப்பப்பட்டனர், பின்னர் அவர்கள் மீது குண்டுவீசினர்.அந்த அட்டூழியங்கள் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் இங்கு உரையாற்றிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் எட்டேவே 'அமெரிக்கா, கனடாவைப் பின்பற்றி இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானியா தடைகளை விதிக்க வேண்டும்" என தெரிவித்தார்.அத்துடன் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடன் நீக்கப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு இந்த விவாதம் கணிசமான விடயங்களை ஆராய்ந்திருக்கிறது.ஆனால், இவ்வாறான விவாதங்கள் மூலம் எவ்வாறான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகிறது?  சிங்கள பேரினவாதிகளுக்கு குறிப்பாக சுகபோக வாழ்க்கை வாழும் போர் குற்றவாளிகளுக்கு எவ்வாறான தண்டனைகள் கிடைக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். தாயக மண்ணில் தங்களுடைய உறவுகளை நினைவுகூருவதற்கு கூட தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லாத நிலைமையையும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கமும் பொலிஸாரும் நடந்துகொள்ளும் அருவருத்தக்க விடயங்கள் தொடர்பில் கூட ஒரு துளியேனும் வாய்திறக்காத சர்வதேச சமூகம் ஈழத்தமிழருக்கு எதனை செய்யப்போகிறது என்பதற்காக தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால், இன்று தாயக மண்ணில் வாழும் தமிழர்கள் தெளிவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கட்சிகளுக்கு பின்னால் செல்லும் அரசியலையோ அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லும் மடைமைத்தன அரசியல் போக்கையோ அவர்கள் விரும்பவில்லை. காரணம் இன்று தமிழர் தாயகத்தில் கட்சி அரசியல் செய்பவர்கள் எவரிடத்திலும் தாயக கோட்பாடோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியுடன் கூடிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான அக்கறையோ திராணியோ இல்லை. அதனை அந்த தலைவர்கள் தொடர்ந்தும் தங்களுடைய முட்டாள்தனமான - இராஜதந்திரமற்ற நகர்வுகளின் ஊடாக வெளிப்படுத்திவருகிறார்கள். இன்று தாயக மண்ணில் அரசியலை தொழிலாக செய்துவரும் தலைவர்கள் அனைவருக்கும் இருக்கும்  ஒரே குறிக்கோள் 'தலைமை" பாத்திரம் மாத்திரமே. யார் தமிழ் மக்களுக்கு தலைமை வகிப்பது - யார் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தலைமை  வகிக்கப்போவது என்பதே அரசியல் தொழில் வாதிகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆகவே இவர்கள் நிச்சயமாக சர்வதேச சமூகத்தையோ அல்லது ஸ்ரீலங்காவின் பேரினவாதிகளையோ பகைக்கும் அரசியலை செய்யப்போவதில்லை.

2009 இற்கு முன்னர் ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமையும்  2009 இற்கு பின்னர் தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளும் சற்று வித்தியாசமானவை. அதாவது சிங்கள பேரினவாதிகளின் குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் இன்று அவர்கள் தமிழருக்கு எதிராக நடத்திவரும் அநீதிகள் சற்று முன்னரைவிட வித்தியாசமானவை.அன்று ஈழத்தமிழருக்கு என்று ஒரு பாதுகாவல் அரண் இருந்தது. ஈழத்தமிழரை நெருங்கும் ஒவ்வொரு ஆபத்துக்கும் எதிராக தமிழீழம் எதிர்தாக்குதலை மேற்கொண்டிருந்தது.அன்று ஈழத்தமிழருக்கு என்று ஒரு தலைமை இருந்தது. அந்த தலைமை எதிரிகளை துவம்சம் செய்துகொண்டிருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. அதனால் எதிரிகள் தங்கள் இஷ்டத்துக்கு அநீதிகளை கட்டவிழ்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்து நிற்பதற்கு தகுதியான தலைமையை நிச்சயமாக இனிவரும் காலங்களில் ஈழத்தமிழர்களால் பெறமுடியாது. ஆனால், ஒரு இராஜதந்திரமுள்ள - தமிழ்த்தேசிய அரசியலை முன்நகர்த்தக்கூடிய தலைவர்கள் கூட ஈழத்தமிழர்கள்  மத்தியில் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். அவ்வாறான ஒரு தலைமை ஈழமண்ணிலிருந்து எழுவது கட்டாயமாகும். அதனை கண்டறிய வேண்டிய முழுப்பொறுப்பையும் ஈழத்தமிழர்களே பொறுப்பேற்கவேண்டும். அது நடந்தால் மாத்திரம் தான் ஈழத்தமிழரின் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டுவதுடன், சிங்கள பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு ஓய்வை கொடுக்கமுடியும். அத்துடன் சர்வதேசத்தையும் உற்சாகத்துடன் இயங்கவைக்க முடியும் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்கின்றோம்.