இந்தியா-சீனாவின் பனிப்போரும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்

Admin
Nov 10,2023

ஈழத்தமிழர்களை ஸ்ரீலங்காவின் பேரினவாதிகள் மாத்திரமல்ல சர்வதேச நாடுகளும் மிரட்ட ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக சீனா - இந்தியாவின் பனிப்போர் ஈழத்தமிழருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தற்சமயம் சூழத்தொடங்கியிருக்கிறது. ஈழத்தமிழரின் மிக முக்கிய தளமாக விளங்கும் பாக்கு நீரிணை இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சைக் களமாக மாறிவருகிறது என்ற செய்தி அண்மைக்காலமாக அடிபடுகிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அண்மைக்காலமாக சீனா தமிழர் தாயகம் தொடர்பில் அதிக கரிசனையை கொண்டு செயற்படுவதாக தெரிகிறது. கடந்தவாரம் கூட இலங்கைக்கான இந்திய தூதுவர் தமிழர் தாயகத்துக்கு விஜயம் செய்து பல இடங்களையும் பார்வையிட்டு கொழும்பு திரும்பியிருப்பதுடன், பல உதவிகளையும் தமிழர் தாயக உறவுகளுக்கு வழங்கியிருந்தார். இது அண்மைக்காலத்தில் சீன தூதுவரின் இரண்டாவது விஜயமாகும். அத்துடன் இந்தியாவும் தங்களுடைய கண்காணிப்பாளராக கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டைமானை நியமித்து கிழக்கு மாகாணத்தை குறிப்பாக திருகோணமலையை கண்காணித்து வருகிறது. இவை வெறும் சம்பவங்களாகவோ நிகழ்வுகளாகவோ பார்க்க முடியாது.
இந்நிலையில், அத்துமீறிய இந்திய இழுவை படகுகளின் சட்டவிரோத எல்லை தாண்டலைக் கட்டுப்படுத்தும் வகையில் வடக்கு கடலை சீனாவிற்கு வழங்க இலங்கை கடற்றொழில் திணைக்களம் முனைகின்றது. இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படுவதுடன் இந்த அழிவிலிருந்து தம்மை காப்பாற்றுமாறு இந்தியாவிடம் தாயக மீனவர்கள் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்றொழில் திணைக்களத்தினால் எமது வளங்களும் வாழ்வாதாரங்களும் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் எமது இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது. கடற்றொழில் திணைக்களமும் சீனாவும் சேர்ந்து வடக்கு கடற்றொழிலாளர்களை கடலைவிட்டு அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன.
இதனால் எமது கடலில் குறிப்பாக வடகிழக்கு கடற்பரப்பில் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு, வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாதளவிற்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என தாயக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், ஈழத்தமிழினத்தின் வாழ்வும் வளமும்மிக்க பாக்கு நீரிணை இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சைக் களமாக மாறுமாயின் முதலில் அழிவது ஈழத்தமிழர்கள்தான். நாங்கள் அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்க போவதில்லை என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
சீனா என்பது இன்று மிகப்பெரும் சக்தியாக - வல்லரசாக உருவெடுத்திருக்கும் ஒரு நாடு. அவ்வாறான ஒரு நாட்டுக்கு வடக்கில் மீன்பிடித்து தொழில் செய்ய வேண்டுமென்றோ அல்லது ஈழத்தமிழருக்கு பெரியளவில் நன்மை செய்ய வேண்டுமென்ற தேவையோ இல்லை. தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரசெய்து பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி அதனூடக முழு இலங்கையையும், பாக்குநீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும். திருகோணமலையும் பாக்கு நீரிணையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால்தான் ஆசியாவையும் இந்துமா சமுத்திரத்தையும் கையாள முடியும் என்ற நிலைமை இருக்கும் நிலையில் இந்தியாவும் சீனாவும் இவ்விரண்டு அதிமுக்கிய தளங்களையும் கைப்பற்றிக்கொள்வதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இதில் ஈழத்தமிழர்கள் இவ்விரு நாடுகளுக்கும் ஒரு பொருட்டாக இருக்கமாட்டார்கள்.
காரணம் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த ஸ்ரீலங்காவின் இன அழிப்புக்கு இவ்விரு நாடுகளும் மிகப்பெரியளவில்  பங்களித்திருந்தவை. ஆகவே, இந்தியா தற்பொழுது தனக்கு ஆபத்தாக மாறிவரும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளித்துக்கொள்வதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறது. இதில் ஈழத்தமிழர்களோ அல்லது தமிழர்களின் நிலைப்பாடுகளோ - நலன்களோ ஒரு பொருட்டாக அந்நாட்டுக்கு இருக்க வாய்ப்பில்லை.ஸ்ரீலங்காவுடன் மென்மையான போக்கை கையாண்டு சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் ஒரு தந்திரோபாயத்தையே இந்தியா முன்னெடுக்கும். குறிப்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறும் விடயங்களுக்கு தலையாட்டி பொம்மையாக இந்தியா இருக்குமே தவிர, ஈழத்தமிழரின் நலனில் கவனம் எடுக்கும் என்பது கேள்விக்குறியே. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் தலைவர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டிருந்தார். அதேபோல், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழ் தலைமைகள் இந்திய பிரதமருக்கு பல கடிதங்களை எழுதி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அதற்கு இந்தியா சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இது தான் இந்தியாவின் தற்போதைய ஈழத்தமிழர் தொடர்பான நிலைமை. இந்தியாவுக்கு இன்று தலையிடியாக மாறியிருக்கும் சீனாவின் இலங்கையுடனான தொடர்பை குறிப்பாக தமிழர் தாயகம் மீது கண்வைத்திருக்கும் சீனாவின் பார்வையை இல்லாமல் செய்வது அல்லது அதற்குள் தாங்கள் எவ்வாறு புகுந்துகொள்ளலாம் என்பதே பெரும் விடயமாக மாறியிருக்கிறது.ஆகவே ஈழத்தமிழர்கள் இனியும் இந்தியாவை நம்பிக்கொண்டிருக்காமல் மாற்று  வழிகளை தேடிக்கொள்வது அவசியமாகும்.அதைவிடுத்து இனியும் தொப்புள்கொடி உறவு என்று கூறிக்கொண்டிருப்பதாலோ அல்லது இந்தியாவுக்கு பின்னால் செல்வதாலோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறிவைக்கின்றோம்.