'யுத்த குற்றத்திற்கான போதிய ஆதாரங்களை கூட்டமைப்பு வழங்கியுள்ளது'

Admin
Sep 01,2022

“கடந்தகாலங்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு போதிய ஆதாரங்களை இனப்படுகொலையாக இருந்தாலும் யுத்த குற்றங்களாக இருந்தாலும் அனைத்திற்குமான ஆதாரங்கள் ஆரம்பகாலங்களிலே ஜெனீவாவிற்கு வழங்கியுள்ளது எனவும் தற்போது நடைபெற இருக்கின்ற கூட்டத்திற்கான ஆதாரங்கள் விசேடமாக வழங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை”என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோ னோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

"ஜெனீவாவில் போர்குற்றம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கான போதியளவு சான்றிதழ்கள் வழங்கவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளார்கள்" இது தொடர்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது,

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஒ.எம்.பி அலுவலகம் தேவை என்பது அவர்களின் கோரிக்கை.

உள்ளக பொறிமுறையுடன் தீர்வினை எட்டுவதற்கான அலுவலகத்தினை காணாமல் ஆக்கப்பட்டவர்களினள் உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.

சர்வதேச ரீதியான பொறிமுறையுடன் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். உள்நாட்டு பொறிமுறையில் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள்.

இதனை உடனடியாக நிறுத்திவிட்டு சர்வதேசத்திலான பொறிமுறையின் கீழ் அவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று ஆராயப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்.

அப்பொழுது இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது முன்னாள் ஐனாதிபதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் தான் காணாமல் போனவர்களுக்கான முழு காரணமாக இருக்கின்றார்.

இன்று அவர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைய முடியாத நிலையில் நாடோடியாக சென்று நாடுவிட்டு நாடு சென்று குறுகியகால தங்கலில் இருக்கின்றார்.எந்த ஒரு நாடும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

எங்கள் மக்களின் சாபம் அவரை விட்டுவைக்கவில்லை அவரை மட்டுமல்ல ராஜபக்ச குடும்பம் அந்த கட்சியினர் அனைவரையும் விட்டுவைக்கவில்லை.

தமிழ்மக்களின் சாபம் ஏதோ ஒருவகையில் அவர்களை துரத்திக்கொண்டிருக்கின்றது. அவர்கள் இந்த நாட்டிலும் நின்மதியாக வாழ முடியாது. வெளிநாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாத நிலை இருக்கின்றது.

வினை விதைத்தவன் வினை அறுத்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அவர்கள் இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

இன்று உறவுகளை தேடி அலைந்த தாய்மார்கள் இறந்து கொண்டு செல்கின்றார்கள் இது அவர்களின் இயற்கை இறப்பல்ல கொலை. வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் திட்டமிட்ட வகையில் கொலை செய்யப்படுகின்றார்கள். இந்த அரசாங்கம் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் சர்வதேச தலையீடு ஊடாகத்தான் நிதந்தர தீர்வினை எட்ட முடியும்” என  தெரிவித்துள்ளார்.