'சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்துங்கள்'

Admin
Aug 31,2022

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டால் அடுத்த மாற்று வழியானது தேர்தலை நடாத்துவதே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் அது இதுவரையில் வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றுக்கான அடித்தளமாக தேசியப் பேரவையொன்றை நிறுவுவது தொடர்பிலான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அதிகாரங்கள் குறைந்து விடும் என்ற காரணத்தினால் முன்மொழிவுகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் நிறுவுவதனை விடவும் தனிப்பட்ட அதிகாரங்கள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படாவிட்டால் மாற்று வழியாக தேர்தலை நடாத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கான அடிப்படையாக ஒரு தேசிய சபை குறித்து சில தரப்பினர் அபிப்பிராயம் .அதற்கு ஏதேனும் ஒரு சட்ட வடிவம் தேவை. துரதிஷ்டவசமாக, இது அமைச்சரவையின் அதிகாரங்களைக் குறைக்கும் என்பதால், மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான, பொதுஜன பெரமுன, இதை நாடாளுமன்றத்தில் முன்வைக்கக் கூடாது என்று கருதுவதாக மைத்திரி குறிப்பிட்டார்.

இதன்படி, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு இடையில் சபையொன்று இடம்பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்களுக்கு தங்களது தனிப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பலன்கள் பற்றி சிந்திக்காமல், அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் தேர்தலுக்கு செல்வதே மாற்று வழி என்பது தெளிவானது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.