சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தமிழர் பிரதேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டம்

Admin
Aug 30,2022

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தமிழர் பிரதேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஓன்று  முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில்...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றுடன் 2018 நாட்களைத் தாண்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஐ.நா.வினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமாக பிரகடனப் படுத்தியதையடுத்து ஆண்டு தோறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னேடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில்...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் மன்னாரில் இந்த அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளுடன் இணைந்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பஜார் பகுதியூடாக மன்னார் பிரதான சுற்று வட்டம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் சிவில் சமூக அமைப்பினர் பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருமலையில்...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போரணியாகச் சென்று கத்தோலிக்க மதகுரு டன்ஸ்டன் பிரட்ரிகிடம் மஹஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட குறித்த சங்கத்தின் தலைவி செபஸ்டியான் தேவி, நாளுக்கு நாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாற்றமடைந்து வரும் இந்த நாட்டில் யாரிடம் சென்று தமது குறை குற்றங்களை முறையிடுவது என கேள்வி எழுப்பினர்.

மேலும் தொடர்ச்சியாக 14 வருடங்களாக தாம் தமது உறவுகளை தேடிவருவதாக தெரிவித்த அவர், சர்வதேசம் தலையிட்டு தமது சொந்தங்களுக்கான முடிவை எடுத்துத் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.