வடமாகாண தொல்லியல் திணைக்களத்திற்கு புதிதாக 80 சிங்களவர்கள் - வேறு துறைக்கு மாற்றப்பட்ட தமிழர்கள்!

Admin
Sep 10,2023

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் வடக்கு அலுவலகத்துக்கு  80 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 33 பேர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். 

இதேவேளை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றிய 5 தமிழர்கள் ரயில்வே திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  8 பேர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்  பிராந்திய அலுவலகத்திற்கு 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர். 

இவர்கள் தொழிலாளர் தரத்துக்க்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நியமனங்களூடாக  முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட அலுவலகங்கள் தனி சிங்களவர்களால் நிரம்பியுள்ளது. 

தற்போது நியமிக்கப்பட்ட சிங்களவர்களும் அரசியல் செல்வாக்கினூடாக இடமாற்றத்தை பெறுவதற்கு முனைப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 5 தமிழர்கள் பணியாற்றிய நிலையில் அவர்கள் ரயில்வே திணைக்களத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.