கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்

Admin
Aug 27,2022

திருகோணமலை - வெருகல் பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டால் இன்று(27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“100 நாள் செயல்முனைவு” எனும் திட்டத்தின் கீழ் இம்மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் 27வது நாளாக வெருகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமென தீபமேற்றப்பட்டு பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் மக்கள், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்றுகூடுவது எங்கள் உரிமை, அரசியல் உரிமை எமக்கு வேண்டும் உள்ளிட்ட கோசங்கள் எழுப்பியதுடன்  பதாதைகளையும் ஏந்தியவாறு  ஈடுப்பட்டுள்ளனர்.