சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்!

Admin
Aug 25,2022

சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமுமான ஒகஸ்ட் 30ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்திய சாலைக்கு முன்பாக குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ள, மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியற்கட்சிகளின் பிரதிநிதிதிகள், பொது அமைப்புக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி 2009ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்த போராட்டத்தில் தீர்வுகள் காணப்படாத நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் முல்லைதீவில் தொடர் கவனயீப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தமது உறவுகள் கிடைக்கும் வரை குறித்த போராட்டம் தொடரும் என்று அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது எதிர்வரும் 30ஆம் திகதி 2000 நாளை கடக்கின்றது.