இலங்கைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

Admin
Aug 23,2022

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை, சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் என்பது, போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பொருந்தாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஹஷந்த ஜவந்த குணதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் ஒரு புதிய தாழ்வு நிலையாகும்.

ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை ஆயுதமாக்குவது என்பது, அதிகாரிகள் எந்த வித விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதற்கும், எதிர்ப்புக் குரல்களை எப்படித் திட்டமிட்டு ஒடுக்குகிறார்கள் என்பதற்கும் ஒரு சான்றாகும்.

இது சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு எதிரானது, குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கு எதிரானது என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் பொருந்தாது. அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

இந்த சட்டத்தின் மூலம், குற்றஞ்சாட்டப்படாமல் ஒரு வருடம் வரை சந்தேக நபர்களை தடுத்து வைக்க முடியும். எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை மேலும் தடுத்து வைக்கும் உத்தரவில் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திடக் கூடாது என்று யாமினி மிஸ்ரா கோரியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம், இலங்கையில் துஷ்பிரயோகத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இதன் காரணமாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான ஒரு கருவியாக மீண்டும் மீண்டும் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையினரும், ஏனையோரும் இலங்கை அரசாங்கம் அமைதியான போராட்டங்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் சிறுபான்மையினர், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சனக் குரல்களைக் குறிவைத்து துன்புறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.