‘ஜனநாயகவாதியான’ ரணில் மீண்டும் பழைய அடக்குமுறைகளையே பிரயோகிக்கின்றார் !

Admin
Aug 23,2022

பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் ‘ஜனநாயகவாதியாக’ கருதப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீண்டும் பழைய அடக்குமுறைகளை நடவடிக்கைகளையே பிரயோகிக்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான விடயமாக இருக்கக்கூடும்.

ஆனால் இதனாலேயே நாம் தனிநபர்களுக்கு அப்பால் செல்வதும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியதும் அவசியமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகிய மூவரையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ள நிலையில், மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்திவரும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இவ்விடயம் தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளபோது பொலிஸார் உரிய செயன்முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக பொய்யான கதைகளைச் சோடிப்பதில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி இவ்விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையான விதத்திலும் பாசிசவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் போன்று நடந்துகொண்டதாகவும் பொய்யான கதையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கிடைக்கப்பெற்றுள்ள காணொளிகள் மற்றும் போராட்டக்களத்திலிருந்து அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளமையும் பொலிஸாரே போராட்டக்காரர்களைத் துரத்திச்சென்றிருப்பதுடன் நீர்த்தாரைப்பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி போராட்டக்காரர்கள் பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்கான தண்டனையாகவும் ஏனையோர் எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும் கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இழைத்த குற்றம் என்ன? அல்லது அவரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தாமல் 3 மாதங்களுக்குத் தடுத்துவைக்கவேண்டியதன் அவசியம் என்ன? என்பது குறித்துத் தெளிவுபடுத்துவதற்கு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தவறிவிட்டார்.

உண்மையில் இதன் பின்னணியில் உள்ள காரணம் வசந்த முதலிகேவை தண்டிப்பதும் ஏனையோருக்கான எச்சரிக்கையை வழங்குவதுமேயாகும். இதனை அனுமதிக்கின்ற சட்டமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் காணப்படுகின்றது.

பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் ‘ஜனநாயகவாதியாக’ கருதப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீண்டும் பழைய அடக்குமுறைகளை நடவடிக்கைகளையே பிரயோகிக்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான விடயமாக இருக்கக்கூடும்.

ஆனால் இதனாலேயே நாம் தனிநபர்களுக்கு அப்பால்சென்று ஆராய்வதுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.