கோட்டா தொடர்பில், ரணில் எடுத்த தீர்மானம் ; பொதுஜன பெரமுன அறிவித்தது

Admin
Aug 22,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைக்கின்றமை தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறுகின்றார்.
 

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதிலொன்று கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், வெகுவிரைவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிற்கு மீண்டும் வருகைத் தருவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரச நிறுவனங்களின் வியூகங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றால், அது குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காது அதனை செய்ய வேண்டாம் என தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அரச நிறுவனங்களின் வியூகங்களில் மாற்றங்களை கொண்டு வரும் போது, தொழிற்சங்களுக்கு அறிவித்து, அவர்களின் யோசனைகளை பெற்று, நாடாளுமன்றத்திற்கு அறிவித்து அதனை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, விவசாயிகளுக்கு உரம் மற்றும் உர மானியத்தை வழங்க எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவிக்கின்றார்.