'இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துங்கள்'; ஜெனீவா பறக்கும் மகஜர்

Admin
Aug 21,2022

எம்மை இனப் படுகொலைக்கு உள்ளாக்கிய கோட்டாபயவையும் அதனுடன் சம்பந்தப்பட்ட அரசில் உள்ளவர்களையும் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து மகஜர் ஒன்றை ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கட்சித்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை அழைத்து இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன்நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்பாக அனைவரினதும் ஏகோபித்த கருத்தாக ஜெனீவா கூட்டு நாடுகளுக்கு அனுப்புவதற்கு மகஜரில் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.

கடந்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி அனைவரும் ஒற்றுமையாக ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்தது போல் இந்தத் தடவையும் இதை செய்வதற்கு நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றோம்.

இதற்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. நாங்கள் எழுதிய மகஜரை தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனைய கட்சிகளும் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தான் வந்த பிரதிநிதிகள் கூறியிருக்கிக்கின்றார்கள். அதை தமது தலைமை பீடங்களுடன் கதைத்து தான் தமது இறுதி முடிவை அறிவிப்பார்கள்.
 
காலம் போதியதாக இல்லை. இந்த அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து அந்த மகஜரை அனுப்புவதாக உள்ளோம்.அதைவிட இன்னுமொரு மகஜரை தயார் செய்து வைத்துள்ளோம்.

அது சமூக அமைப்புகளும், பாதிக்கப்பட்ட தரப்பினருமாக சேர்ந்து அனுப்புவதற்காக அதிலே நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு, கையகப்படுத்தப்பட்ட நிலம், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், விகாரைகளை அகற்றல் என ஆறு விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றோம்” என்றார்.