சர்வதேச நாடுகளிடம் உதவி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Admin
Aug 21,2022

அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதிக்கு வந்து 2009 நாள் ஆகிவிட்டது, சர்வதேச தலையீடே உடன் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 2009 ஆம் நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார்களால் போராட்ட தளத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் இன்று (21)முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்

இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு இனப் போரில் 146 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் குழந்தைகள் ஆதரவற்றோர் ஆனார்கள். 25 ஆயிரம் தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கபட்டுள்ளனர்.

இதற்கு எமக்கு தேவை நீதி, இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை, ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் தலையிட்டு எமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும், என கவலை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.