'காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு உதவுவோம்'

Admin
Aug 20,2022

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கும், நீதியியல் பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உதவி செய்ய உள்ளோம் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் இன்று யாழ்.மாநகரசபைக்கு விஜயம் செய்திருந்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபை முதல்வருடைய சந்திப்பானது யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு உதவி செய்வதை உள்ளடக்கியதாக உள்ளது.இன நல்லிணக்கத்தின் ஊடாக அவர்களது விருப்பங்களை பூர்த்தி செய்வதே ஆகும்.இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முதன்மைப்படுத்துவது இலங்கையை ஆகும்.

அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம். ஏனெனில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதனால் ஆகும்.

இந்த வருகையின்போது நான் முதல்வரை சந்தித்த போது அவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதி சார்பில் என்னிடம் கூறிய விடயம் தொடர்பில், நாங்கள் அவர்களது உறவுகளை கண்டுபிடிப்பதற்கும், நீ தியியல் பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உதவி செய்ய உள்ளோம்.

அதுமட்டுமல்லாது முதல்வர் எங்களுக்கு விளக்கிய விடயம் என்னவெனில் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மையாகக் கருதுவது ஆகும்.

இவ்விடயத்தை கொழும்பிலுள்ளவர்களுடனும், அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் ஏனைய பங்காளிகளுடன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின், முறைமைகள் ஊடாகவும் கலந்துரையாட உள்ளேன்.

இந்த கலந்துரையாடல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துடன் நான் இப்பொழுது கொழும்புக்கு செல்கின்றேன். இது ஒரு மிகப்பெரிய வருகையாக எனக்கு அமைந்துள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி.- என்றார்.