தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு

Admin
Aug 20,2022

தமிழ் தேசியத்தின் பால் பயணிக்கும் அனைவரையும் தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணையுமாறு வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 51வது ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதம் தயாரிக்கும் கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது ஆதரவினையும் கருத்துக்களையும் வழங்குமாறு தமிழ் தேசியத்தின் பால் பயணிக்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில்,
 
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 2018 மார்ச் மாதக் கூட்டத்தொடரிலிருந்து எமது சாட்சியங்களை அளித்து வருகின்றோம்.

கூட்டத்தொடருக்கு செல்ல முடியாத காலத்தில் இலத்திரனியல் ஊடகம் மூலம் சாட்சியமளித்துள்ளோம். 2017 பெப்ரவரி 20 ஆம் திகதி தொடங்கிய போராட்டத்தில் எம்முடன் இணைந்திருந்த 138 பெற்றோர்கள் தற்போது இறந்த நிலையிலும் 2000 நாட்களுக்கு மேலாக எம் உயிரினும் மேலான, எங்கள் உறவுகளுக்கான நீதி கோரி போராடி வருகின்றோம்.

கடந்த வருடமும் மார்ச் மாதக் கூட்டத் தொடருக்காக சகல அரசியல் கட்சிகளினதும், மனித உரிமைகளில் அக்கறை கொண்ட அமைப்புகளினதும் ஒத்துழைப்புடன் ஒருமித்து எம் கோரிக்கைகள் ஜெனீவாவுக்கு மகஜராக அனுப்பப்பட்டது.
ஒருமித்த குரலில் கோரிக்கை

அதேபோல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த 51வது கூட்டத் தொடருக்கு முன்பாக நாம் அனைவரும் இணைந்து எமது கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன் வைப்பது அவசியமாகிறது.

எனவே, இது தொடர்பாகக் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்து அதை செயல்வடிவாக்குவதற்காக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தங்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.