வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Admin
Aug 20,2022

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரிடம் போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று முந்தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 16 உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வசந்த முதலிகே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

தெற்காசியாசிய பிராந்திய காரியாலயம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

குடியியல் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பது மற்றும் பயங்கரவாதம் அல்லாத அவர்களின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்படாத கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.