ஈழத்தமிழர் தொடர்பில் ரிஷி சுனக்கின் நிலைப்பாடு

Admin
Aug 19,2022

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும், ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த பாரிய அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும் போராட்டம் தொடர்பிலும் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளார்.

அத்துடன், ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைப் போன்று இலங்கை அதிகாரிகள் மீதும் இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கும் சாத்தியம் குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய தமிழ் பழமைவாதிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் போது பிரித்தானியாவில் தமிழ் மக்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்தும் அவர் இதன் போது கருத்து வெளியிட்டிருந்தார். உள்நாட்டுப் போர் மற்றும் 2009 நிகழ்வுகளால் ஏற்பட்ட காயம் மற்றும் வலிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும், ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த பாரிய அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும் போராட்டம் தொடர்பிலும் கரிசனை வெளியிட்டிருந்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியதன் காரணமாக, இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தனது ஆதரவை அவர் வலியுறுத்தினார்.

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுனக், தான் இந்த விஷயத்தை கவனிப்பதாகவும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தரநிலைகள் இருக்கும் என்றும், ஆனால் இங்கிலாந்துக்கு இது நீதிமன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டப்பூர்வமான விஷயமாக இருக்கும் என்றும் கூறினார்.